மனித வாழ்க்கை, மாற்றம் என்ற தொடர் நிகழ்வுக்கு தொடர்ந்து உட்படுகிறது. இந்த மாற்றம் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய பரிணாமம் முதல் குழந்தையில் இருந்து முதுமை வரை தொடரும் உடல் மாற்றம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தான் இயற்கையில் மாற்றம் என்ற ஒரே விதி மட்டும் மாறாமல் இருக்கிறது. இதில் வாழ்வியல் மாற்றம் என்பது மனிதன் தன் அறிவின் திறனால் தன்னுடைய வசதிக்கு ஏற்றார் போல் தன் வாழ்வை மாற்றி ஆரோக்கியமாக தன் வாழ்நாட்களை கடந்து செல்வதே ஆகும்.
இன்றைய அறிவியல் உலகில் இது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. இந்த அறிவியல் என்னும் இருமுனை கத்தியை சரியாக பயன்படுத்தாவிடில் இது வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கு லாக சீரழித்துவிடுகிறது. இதில் முதலில் பாதிக்கப்படுவது மனித உடல்: பிறகு மனம். உடலும் மனமும் பாதிக்கப்பட்ட மனித வாழ்க்கை நாகமாக மாறிவிடுகிறது.
Transformation Program என்றால் என்ன?
இன்றைய தேதியில் Transformation Program என்பது ஒரு வியாபார யுக்தியாக மாறி வருகிறது. ஒரு குறிப்பிட்ட குறைந்த காலத்தில் உடல் எடையைக் கூட்டவோ குறைக்கவோ செய்து உடல் அளவில் மாற்றம் ஏற்படுத்தும் பயிற்சி மற்றும் உணவு முறைக்கு Transformation Program என்று பெயர் இட்டு அதன் பின் அணியில் ஒரு supplement யோ உடல் பயிற்சி உபகரணத்தையோ அல்லது personal training சேவையையோ விற்று பணம் சம்பாதிக்கும் வழியாக மாறி வருகிறது.இதை போன்ற transformation program மை பின்பற்றும் எத்தனை பேர் அவர்கள் அளித்த வாக்குறுதிப் படி மாற்றம் அடைகிறார்கள்? அதிகபட்சம் 5 முதல் 10 சதம் மக்கள் மட்டும்தான். அதில் எத்தனை பேர் இந்த பயிற்சிகளையும் உணவுமுறையையும் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்? உடல் மாற்றம் ஏற்பட்ட அடுத்த 8-10 வாரத்திற்கு சமூக வலைதளத்தில் லைக் வாங்கிய பிறகு அவர்கள் தங்கள் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறார்கள். “ஏன் பாஸ் இதை Maintain செய்யவில்லை?” என்று கேட்டால்? “அது எல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ் சும்மா temporary தான் என்று பதில் வருகிறது. இதில் சிலர் மிக உச்சத்திற்கு சென்று தேவை இல்லாமல் குறுக்கு வழிக்கு ஆளாகி (Steroid) – இந்த ஊக்க மருந்துகள் இருந்தால்தான் நம் பிட்னெஸ்ஸை Miamtain செய்ய முடியும் என்ற தவறான கருத்துக்கு வந்து தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறார்கள். Transformation என்பது நம் வாழ்வில் ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்தி அதன் பலன்களை வாழ்நாள் முழுவதும் பெறும் ஒரு நல்ல பழக்கமாக இருக்க வேண்டும்.
“உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்களில் நிறைய தவறான நம்பிக்கைகள் உள்ளன. இதற்கு அடிப்படை காரணம் நமது பேராசையே”.
நான் என்னுடைய Lifefit Transformation Pogram (LTP என்று சுருக்கமாக குறிப்பிடப்படும்) போகும் முன் இதை யாரை மனதில் கொண்டு உருவாக்கினேன் என்று விளக்கி விடுகிறேன்.
உடற்பயிற்சி, உணவுமுறை, மன ஆரோக்கியம் மற்றும் ஆன்ம நலன் இந்த நான்கு நிலைகளிலும் சமநிலை அடைய படிப்படியாக செய்யும் சிறு மாற்றத்தின் மூலம் ஒரு ஆரோக்கிய வாழ்வை அடைய வேண்டும். என்ற எண்ணம் கொண்டவர்களை மனதில் கொண்டு இதை உருவாக்கி உள்ளேன். சுருக்கமாக சொன்னால் வழக்கமான Transformation Program களில் வெற்றி பெற முடியாதவர்களுக்கானதே இந்த முறை.
நீங்கள் ஏற்கெனவே ஆரோக்ய ஆர்வலர் (Fitness enthusiast) என்றால் இதில் உள்ள முறைகள் மேலும் உங்கள் பயிற்சி முறையை செம்மைப்படுத்தி தொடர்வதற்கு உபயோகமாக இருக்கும்.
(“அதாவது Turorial College னு சொல்றீங்க ) நம்ம அசரீரி எனடா ரொம்ப நாழியா ஆளை காணோம் என்று பாரித்தேன்.
அடடே நம்ம அசரீரி! ஏனடா ரொம்ப நாழியா ஆளை காணோம் என்று பார்த்தேன்.
“ஆமா ஏதோ ஆம்சயும் ச்செஸ்டையும் கூட்டி Six பேக் காட்ட பயிற்சி தருவீங்கன்னு பார்ததா உடல், மனமுன்னு சாமியார் கதை விடுறிங்க”.
“அன்பரே! அதுக்குத்தான் Google இருக்கே அப்புறம் ஏன் நான் ஏதாவது விஷயம் சொல்ல வேண்டாமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதறேன், நானே தட்டு தடுமாறிக்கிட்டு இருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு Disturb பண்ணாத Please.”
நம் வாழ்வில் எந்த ஒரு சின்ன வாழ்க்கை முறை மாற்றத்தை செய்ய முயற்சித்தாலும் அது தோல்வியில் தான் முடிகிறது. இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா?
எடுத்துக்காட்டாக – “காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு எழ முயற்சிப்பது’
எவ்வளவு பேரால் இந்த முயற்சியில் வெற்றி பெற முடிகிறது? இந்த செயல் விளைவின் தொடர்நிலையே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது, உணவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது… மேலும் பல தொடர் நிலைகளில் இந்த சின்ன பழக்கம் நம் வாழ்வை மாற்றி அமைக்கிறது. ஆனால் அலாரம் கடிகாரத்தை ஆஃப் செய்துவிட்டு அதற்கு ஆயிரம் தன்னிலை விளக்கம் அளித்து நம் குற்ற உணர்வில் இருந்து கொள்கிறோம்.
வாழ்க்கை முறை மாற்றம் மனித மன உள் சூழ்நிலையிருந்து வெளி சூழ்நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். அப்போது தான் அது வாழ்வில் ஒரு நிரந்தர மாற்றமாக அமையும்.
வாழ்க்கை முறை மாற்றத்திற்கு பொதுவாக இரு பெரும் தடைகள் ஏற்படுகிறது.
1.மனத்தடைகள் (Mental Block)
2.தவறான நம்பிக்கைகள் (Myth)
1.மனத்தடைகள் (Mental Block): ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை நடைமுறைக்கு கொண்டுவர நம் மனமே பெரும் தடையாக இருக்கிறது. எனக்கு நேரம் இல்லை. என்னுடைய சக்தி அன்றாட விஷயங்களில் செலவு ஆகிவிடுகிறது. அதனால் உடல் சோர்வாக உள்ளது, பயிற்சிகளை செய்ய சரியான வசதிகள் இல்லை, என்னுடைய உடல்நிலைக்கு வை எல்லாம் சாத்தியப்படாது. குடும்ப சூழல் பணவசதி என்று எண்ணில் அடங்காத மன தடைகளை நாம் ஏற்படுத்தி கொள்கிறோம்.
2.தவறான நம்பிக்கைகள் (Myth): உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்களில் நிறைய தவறான நம்பிக்கைகள் உள்ளன. இதற்கு அடிப்படை காரணம் நமது பேராசையே. குறுகிய காலத்தில் எப்படி உடல் எடையை குறைப்பது அல்லது கூட்டுவது எப்படி? வெறும் கஷாயம் குடித்து எடையை குறைப்பது எப்படி? என்று நாம் தேடும் நமது குறுக்குவழிகளே நம்மை தவறாக வழிநடத்தி நமது ஊக்கத்தை கெடுத்து விடுகிறது. இந்த தவறான நம்பிக்கைகளுக்கு நமது அடிப்படை அறிவியல் அறிவு இன்மையும் உள்ளுணர்வு அற்ற மன நிலையும் காரணம் ஆகிவிடுகிறது. இதை பற்றி என்னுடைய CFR தொடரிலும் மெட்டா ட்ரான்ஸ் தொடரிலும் நான் நிறைய விவரித்து உள்ளேன். இந்த கட்டுரைத் தொடரில் அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் திருப்பி பார்ப்போம்.
வாழ்க்கை முறை மாற்றத்திற்கு தேவையான 5 முக்கியமான காரணிகள் என்னவென்றால்,
1.குறிக்கோள் (Goal)
2.திடதீர்மானம் (Will)
3.உங்கள் குறிக்கோள்களை செயல்படுத்த நேரம் (Time)
4.சக்தி (Energy)
5.நிலைப்புத்தன்மை (Consistency)
இதில் உள்ள ஒவ்வொரு காரணிகளையும் சற்று விரிவாக பார்ப்போம். முதலில்…
குறிக்கோள் (Goals) : இந்த நிலையில் நிறைய பேருக்கு சரியான தெளிவு இருப்பது இல்லை. குறிக்கோள்களை வரையறுப்பதிலே நிறைய குழப்பங்கள் இருக்கிறது.
முதலில் எதை செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? எவ்வளவு காலத்தில் செய்து முடிக்க முடியும்? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு அவர்களிடம் சரியான பதில் இருக்காது. இந்த நிலையில் அவர்களின் குறிகோள்கள் ஒரு தற்காலிக ஆசைகளாக மட்டும்தான் இருக்கும். அதேபோல் பல குறிக்கோள்களை ஒரே நேரத்தில் செயல்படுத்த நினைப்பது உங்கள் திடதீர்மானத்தை (Will) குலைத்து ஏதும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடும். எடுத்துக்காட்டாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் ஒருவர் அந்த குறிக்கோளுடன் காலையில் எழுந்திருக்க வேண்டும். தசைகளை இறுக்கப்படுத்த வேண்டும். சிகரட் பழக்கத்தை ஒழிக்க வேண்டும். மேலும் உணவு பழக்கத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வேண்டுமென்று ஒரு புத்தாண்டு உறுதி மொழி எடுத்து கொள்கிறார் என்றுவைத்து கொள்வோம்.
பொதுவாக இந்த நியூ இயர் resolution கள்எல்லாம் இப்படித்தான் இருக்கும் – 1 முதல் 10 தேதி வரை அவர் ஒரு கட்டுப்பாட்டில் இருப்பார். 11ஆவது நாள் தனது குறிக்கோள் வெறியில் செய்யாத அளவுக்கு அதிகமான பயிற்சிகள் செய்து சோர்வை அடைவார். இதன் காரணமாக அடுத்த நாள் காலை சற்று தாமதமாக எழுவார், அதன் தொடர் விளைவால் அன்று அவரால் பயிற்சிகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். இன்றுதான் பயிற்சிகள் செய்யவில்லையே நாம் ஏன் நம் உணவு கட்டுப்பாட்டைத் தளர்த்திக்கொள்ள கூடாது என்ற யோசனை வரும்.
பிறகு ரொம்ப நாள் ஆகிவிட்டது ஒரே ஒரு சிகரட் மட்டும் பிடித்துக்கொள்வோம் என்று ஒவ்வொன்றாக தகர்த்து கொண்ட போவார். 11 ஆம் தேதி தொடங்கிய சரிவு அப்படியே பொங்கல் ஹாலிடே வரை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளலாம் என்று நினைப்பார். அது அப்படியே குடியரசு தினம் வரை தொடர்ந்து ‘பழய குருடி கதவ தெறடி என்ற நிலைக்கு தள்ளப்படும். அதன் பிறகு அடுத்த ஆண்டு வரை அதே பழைய நிலைதான். இந்த நிலைக்கு காரணம் ஒன்றுக்கு மேற்பட்ட குறிக்கோள்களை ஒரே நேரத்தில் செயல்படுத்த நினைத்ததின் விளைவே ஆகும்.
சரியான குறிக்கோள்களை நிர்ணயிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
Rule No 1. உங்கள் வாழ்வில் ஏற்படுத்த வேண்டிய 5 முக்கியமான மாற்றங்களை முதலில் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு மாற்றங்களையும் ஏன் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு 5 வலுவான காணரங்களை கண்டுபிடியுங்கள்.
எடுத்துக்காட்டாக: நான் ஏன் உடல் எடையை குறைக்க வேண்டும் (வாழ்க்கை முறைமாற்றம் 1)
1.என்னுடைய சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
2.நான் என்னுடைய வயதுக்கு இளமையாக தெரிய வேண்டும்.
3.என்னால் எந்த ஒரு வேலையும் தளர்வில்லாமல் செய்ய வேண்டும்.
4.என்னுடைய எடை அளவை குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும்.
5.என்னுடைய நண்பர்களின் கேலிக்கு ஆளாகக் கூடாது.
இந்த முதல் விதி முறைக்கு நீங்கள் தனிமையில் சில மணி நேரம் செலவிட வேண்டும். அதில் தான் உங்களுக்கு சரியான குறிக்கோளை உருவாக்க முடியும்.
Rule No 2. இந்த 5 வாழ்க்கை முறை மாற்றத்தில் மிக முக்கியமாமனவற்றை ஒன்று என்றும் அடுத்து அடுத்த விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாகவும் சரியான வரிசைக்கு கொண்டு வரவும்.
Rule No3. இதில் ஒவ்வொரு வாழ்க்கை முறை மாற்றத்தை கொண்டு வர எவ்வளவு காலம் தேவைப்படும் என்று நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எந்த வாழ்க்கை முறை மாற்றமும் நீங்கள் தொடர்ந்து 48 நாட்கள் பழக்கப்படுத்துவதால் மட்டுமே வழக்கத்துக்கு வரும். சிலருக்கு வேண்டுமானால் இது சற்று சீக்கிரம் நேரும். என்னுடைய அனுபவத்தில் தொடர்ந்து 21 நாளாவது செய்தால் தான் வழக்கத்துக்கு வரும்.
“அப்ப காலை எழுந்திருக்கறத மட்டும் 48 நாள் செய்ய சொல்றிங்க. இதுக்கு நான்… கோயிலா போய்… …”
“பாஸ் நான் முதல்லே சொல்லிட்டேன். உங்களை மாதிரி ப்ருஸ்லீ -க்கு நான் கட்டுரை எழுதல. ஜிம்முக்கு Annual membership கட்டி ஒரு மாசம் கூட தொடர்ந்து போக முடியாத ஆவெரெஜ்க்குனு சொல்லிட்டேன்.
இவங்களை நம்பிதான் பிசினஸ்சே நடக்குது. நினைச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமே இல்லை. இவர்கள் பொன் முட்டை இடும் வாத்துகள். இவர்களை சரியாக பராமரித்தால் நீங்கள் வாழ்நாள் சந்தோசமா இருக்கலாம். Annual Membership காசுக்கு வாத்தை அறுத்தால் அடுத்த தெருவுல வரும் உங்கள் போட்டி ஜிம்மோட உங்க கடையை மூடவேண்டியது தான். நான் ஒண்ணும் காரணம் இல்லாம சுய முன்னேற்ற புத்தகம் எழுத வில்லை. எல்லாத்துக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கு ப்ருஸ்லீ.
LTP இல் முதலில் பயிற்சி, குறிக்கோளை அடையாளம் காணுதல், பிறகு அவற்றை வரையறுத்தல், அவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தல்- பிறகு அதை அடைவதற்காண காலத்தை நிர்ணயிக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றம் என்பது ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வு. நீங்கள் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் எழ வேண்டும் என்றால் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கைக்கு செல்ல வேண்டும். நான் வேண்டுமானால் ஒரு வெளிப்படையான சவால் விடுகிறேன் இந்த கட்டுரையை படிக்கும் 1 சதம் மக்கள் இந்த அடிப்படை விதிக்கு உட்பட கூட மாட்டார்கள். நீங்கள் இதை சோதித்து பார்க்க நினைத்தால் ஒரு பக்கத்தில் ஒரு கால அட்டவணை இட்டு ஒரு 10 நாட்களுக்கு நீங்கள் எத்தனை மணிக்கு படுக்க செல்கிறீர்கள், எத்தனை மணிக்கு எழுத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள் உண்மை புரியும். முதல் கோணல். முற்றும் கோணல், உங்கள் வாழ்க்கை உங்களுக்குள் எழும் இரு வேறு குரல்களால் நிர்ணயிக்கப்படுகிறது. எழுந்திரு என்ற உடன் எழுந்திருந்தாலும் – இல்லை ஒரு 10 நிமிடம் ஆகட்டும் என்று நினைப்பதில்தான் இந்த நிர்ணயம். ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உள்ளது “If you want to change the world start off by making your bed”. நீங்கள் உங்கள் உலகத்தை சரிசெய்ய நினைத்தால் அதை உங்கள் படுக்கையில் இருந்து ஆரம்பியுங்கள். உலகத்தை சரிசெய்யாவிடிலும் உங்களை சரி செய்ய உங்கள் படுக்கையிலிருந்த ஆரம்பியுங்கள்.
LTP முதல் மாற்றமாக 21 நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கைக்கு செல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்திருங்கள். இதை ஒரு அட்டவணையில் படுக்கைக்கு அருகில் கண்ணில் படுமாறு குறித்து வைத்து கொள்ளுங்கள். இதில் ஓரிரு நாள் தவறினாலும் குற்ற உணர்வு அடைய வேண்டாம். முயற்சியை தொடருங்கள். அந்த குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து படுக்க முடியாவிடில் பரவாயில்லை. அந்த நேரத்தை மட்டும் குறித்து வையுங்கள். நாளாவட்டத்தில் இந்த உணர்வு நிலை உங்களை பழக்கத்துக்கு கொண்டு வந்து விடும். இப்படி எழுந்த உடன் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளை போனஸ் ஆக நினைத்து கொள்ளுங்கள் ஏன் எனில் நமது முதல் குறிக்கோள் நம் படுக்கையை சரி செய்தல், எந்த குறிக்கோளையும் அடைய நமக்கு ஒரு திடதீர்மானம் (Will) தேவைப்படுகிறது. அதை பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
ஹரிஹரன் உடற்பயிற்சி துறையில் நீண்டகாலம் அனுபவம் உடையவர். ISSA CFT certificate பெற்றவர். சென்னையில் Lifefit Academy for fitness Professional என்ற நிறுவனத்தின் மூலம் ISSA CFT உட்பட பல உடற்பயிற்சி சார்ந்த கல்விகளை கற்றுக் கொடுக்கிறார். பர்சனல் ட்ரெய்னிங்கும் கொடுக்கிறார்.